Tuesday, July 28, 2009

கிருஷ்ணாவின் அசட்டுத்தனமான சாமர்த்தியம்...!!



கிருஷ்ணா என் எதிர் வீட்டில் வசிக்கும் அக்காவின் குழந்தை.. அவன் ரொம்ப சுட்டி... எதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்... உதாரணத்திற்கு, அவனுக்கு ஒரு கார் வாங்கித்தருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அதை உருட்டிக்கொண்டுபோய் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு துளியும் இருக்காது.. அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து ஆராய்ச்சி செய்ய நினைப்பான்.. அவ்வளவும், கார் அவன் கையில் வந்த ஐந்து நிமிடங்களில்..!!



முதலில்... அவன் பெற்றோர் "அடடா.. எவ்வளவு ஆராய்ச்சி குணம் பாருங்க என் பையனுக்கு" என்பார்கள்... போகப் போக இவன் 'சில்மிஷங்கள்' அனைத்தும் அவர்களுக்கு எரிச்சலைத் தான் தந்தது.. அப்படி என்ன தான் செய்கிறான் என்கிறீர்களா?? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... மேல படியுங்க..



ஒரு முறை... மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த சமயத்தில் மெழுகுவர்த்தி ஏதும் சட்டென்று கிடைக்காதலால் கிருஷ்ணாவின் தந்தை ஒரு பழைய காகிதத்தைப் பற்றவைத்து அதன் பின் மெழுவர்த்தியை தேடி எடுத்துப்பற்ற வைத்தார்... மறுநாள் காலையில் விளக்குகள் அனைத்தையும் அனைத்து விட்டு, சன்னல் கதவுகளையும் சாத்தி விட்டு இருட்டில் எதோ செய்து கொண்டிருந்தான் கிருஷ்ணா... தற்செயலாக இவனைத் தேடிவந்த இவன் தந்தைக்கு ஒரு நிமிடம் உயிரே நின்று விட்டது.. அவன் என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா?? மேஜை மேல் வைத்திருந்த அவனுடைய தந்தையின் சட்டையை பற்ற வைத்து விட்டு தூரத்தில் வந்தமர்ந்து கொண்டு அது எரிகிறதா இல்லையா என்று பார்த்துக்கொண்டிருக்கிறான்...



அதன் பின் அதன் மேல் தண்ணீரை ஊற்றி அதை அனைத்து விட்டு என்னடா இது என்ன செய்ற நீனு கேட்டா... அவன் சொன்ன பதில்...

"துணிய எரிச்சா எவ்ளோ வெளிச்சம் வருதுன்னு பாத்துற்றுந்தேன்பா!!"




இவன் அட்டகாசம் தாளாமல் 3வயதிலேயே பள்ளியில் சேர்த்துவிட்டனர்... அங்கும் இவன் சில்மிஷங்கள் ஓய்ந்தபாடில்லை! மற்ற குழந்தைகளின் பொருட்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது, அதை உடைத்து பார்ப்பது என்றெல்லாம் செய்ய ஆரம்பித்தான்... இவன் கேட்ட பொருளை மற்ற குழந்தைகள் கொடுக்கவில்லையானால் அதைப்பிடுங்கி தூர எறிவது என்றெல்லாம் செய்து கொண்டிருந்தான்...




இவன் சில்மிஷத்தைக் குறைக்க நினைத்த ஆசிரியர் சக மாணவ மாணவியர் முன் திட்டினால் அவனுக்கு புரியும் என்று நினைத்தாரோ என்னவோ.. அவனை சக மாணவ மாணவியர் முன் அப்படி செய்யக் கூடாது என்று அதட்டினார்... அப்போது ஒரு மாணவி அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள்! இவனுக்கு கோபம் வந்திருக்கும் போல...



மதியவேளை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவளுடைய தலைமுடியை (ஒரு பக்கத்து ஜடையைமட்டும்) 'பிளேடு' வைத்து அறுத்து விட்டான்... அறுத்தது மட்டும் அல்லாது அதை அவளிடம் காட்டி அவளை வெறுப்பேற்றி அதை குப்பைக் கூடையில் வீசி எரிந்து விட்டு வந்து அவன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்...



ஒ வென அந்தப் பெண் வீரிட்டு அழ அந்த வகுப்பாசிரியர் வகுப்பிற்கு விரைந்து வந்தார்.. கிருஷ்ணாவின் இந்த வேலையைக் கண்ட அவருக்கு கோபம் வர அவனை அழைத்து அடிக்க முற்பட்டார்.. அப்போது அவன், ஏன் டீச்சர் என்ன அடிக்கறீங்க? அவ எண்ணப் பாத்து சிரிச்சா.. எனக்கு கோபம் வந்துச்சி.. அதனால்தான் நான் அவ முடிய அறுத்துட்டேன்.. நான் அவ முடிய அருத்தேன்னு உங்களுக்கு கோபம் வந்துச்சின்னா நீங்க என் முடிய அறுத்துப் போட்டுடுங்க! என்று தன் மொட்டைத் தலையில் ஆங்காங்கு முளைத்திருக்கும் முடியைக் காண்பித்தான் வெகு சாமர்த்தியமாக.. அவன் சொன்ன பதிலில் சிரிப்பு தான் வந்தது ஆசிரியருக்கு!!