Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, August 14, 2009

குட்டிப் பாப்பா என்ன பண்ணுது?? பாக்கலாம் வாரீகளா??


வெவேவேவா :0 நான் எங்க இருக்கேன் னு கண்டு பிடிங்க பாக்கலாம்!!



என்ன அப்டி பாக்கறீங்க? என்ன மாறி டான்ஸ் ஆடுங்க பாக்கலாம்! ;)



நான் சமத்தா குளிச்சேன்னா என் தலைல இருக்கற பூ வாடவே வாடாதாம், எங்க அம்மா தான் சொன்னாங்க!! அதான் குளிக்கப் போறேன்... :)





எனக்கு தூக்கம் வந்துடுச்சி பா... அப்பரம் பாப்போம்...!!




பூச்சி...!! :)











தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Monday, August 10, 2009

நீங்க மட்டும் தான் அழகா துணி உடுத்தனுமா என்ன??


நீங்க மட்டும் அழகழகா துணி போட்டுக்கறீங்க... எங்களுக்கு மட்டும் உங்களுக்கு ஒதவாத துணிய போடறீங்க?!


இங்க பாருங்க... எங்களுக்கும் வித விதமா துணிய தச்சி விக்கறாங்க...
இனிமே, எங்களுக்கும் அழகான துணி வாங்கிக் கொடுத்தாத் தான் உங்கள சொமந்துக்கிட்டு வெளில வருவோம்! சொல்லிட்டோம் ஆமா...!!





































தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Friday, August 7, 2009

அட! இப்டியும் சமாளிக்கலாமா இவங்கள?


நாம ஏதாவது ஒரு முக்கியமான வேலைய செஞ்சிகிற்றுப்போம்ங்க... அந்த நேரம் பாத்து தான் நம்மளோட தொலைப்பேசியோ(தொல்லைப்பேசியோ) இல்லன்னா நம்ம செல்பேசியோ அழைப்பு மணி விடுக்கும்! யாரோ தெரியலியே... ஏதாவது முக்கியமான அழைப்பா இருக்கப் போகுதுன்னு நாமளும் செய்யற வேலையக் கூட விட்டுட்டு அரக்க பறக்க ஓடிப் போயி அத எடுத்துப் பேசுவோம்!

அந்தப் பக்கத்துலேருந்து ஒரு பொம்பள புள்ள இனிக்க இனிக்க பேசும்...
"சார்/மேடம் நாங்க '....' வங்கிலேருந்து பேசறோம், வாழ்த்துக்கள்! எங்களோட சுயக் கடன் (personal loan) வழங்கும் திட்டத்துல கடன் பெற நீங்க தகுதியானவர்... உங்களுக்கு நாங்க '....' லட்சம் கடனா கொடுக்கறோம்... வாங்கிக்கங்க! மத்த வங்கிகள விட எங்க வங்கியில வட்டி ரொம்ப கம்மி தான்... யோசிக்காதீங்க," அது இதுன்னு பேசிக்கிட்டே போவாங்க!!




நாம வேணாம்னு சொன்னாலும் விடாம நச்சரிப்பாங்க... (அதென்னமோ... நம்மள கடன்காரனுங்களா ஆக்குறதுக்குன்னே ஒரு கும்பல் இத மாறி அலையறாங்க... என்ன பண்றது?) அட... வேணாம்மா! வேணும்னா நானே சொல்றேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டோம்னு வையுங்க... அவ்ளோ தான், நாம தொலைஞ்சோம்... உடனே...
"சார்/மேடம் உங்க முகவரிய சொல்லுங்க நாங்க எங்களோட ஊழியர அனுப்பி வெக்கறோம்... அவர் உங்களுக்கு எங்க திட்டத்தைப் பத்தி விளக்கமா சொல்லுவார்!" னு சொல்லுவாங்க!

என்ன திட்டம்ங்க இவங்களுது?? வாங்கற சம்பளம் கம்மியா இருந்தாலும் இருக்கறத வெச்சிக்கிட்டு நிம்மதியா வாழுரவங்கள ஆச காட்டி கடன் வாங்க வெச்சி அப்புறம் அதுக்கு வட்டிய வேற போட்டு... (ஒரு கால கட்டத்துல அவங்க வாங்கன கடன விட அதுக்கு கட்ட வேண்டிய வட்டிய பெருசா பூதம் மாதிரி வளத்தி விட்டுட்டு ) மாச சம்பளத்த மொத்தமா வட்டிக்கே குடுக்கற நெலமைக்கு கொண்டு வர்றதா?

சமீபத்துல எங்க அம்மாவுக்கும் இத மாறி அழைப்புங்க நெறைய வந்திருக்கு! அவங்களும் கொஞ்ச நாள் 'வேணாம்ங்க, வேணாம்மா' இப்டிலாம் சொல்லி பாத்திருக்காங்க... ஆனா இந்த ப்ரெச்சனை ஒயர மாறி தெரியல... ஒரு நாள் காலைல எங்க அப்பா அலுவலகத்துக்கு கிளம்பறதுக்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்கும் போது எங்க அம்மா அப்பாவுக்கு மத்தியான சாப்பாடு கட்றதுக்கு எதோ அவசர அவசரமா சமச்சிக்கிற்றுந்திருக்காங்க... அந்த நேரம் பாத்து அவங்களோட செல்பேசி அழைப்பு வரவே இவங்களும் போயி எடுத்துப் பேசி இருக்காங்க... (எங்க அண்ணா வோட அழைப்புக் காக காத்துக் கிட்டிருந்திருக்காங்க பாவம்!)

அந்த நேரம் பாத்து யாரோ ஒரு பொண்ணு நான் முன்னாடி சொன்ன மாறியே 'சுய கடன்' தரோம் வாங்கிக்கோங்க னு சொல்லி இருக்காங்க... அத கெட்ட அம்மாவுக்கு எரிச்சல் வரவே...

"சரிம்மா தாங்க வாங்கிக்கறேன் ஆனா திருப்பி லாம் கேக்காதீங்க, நான் கட்ட மாட்டேன் னு சொல்லி இருக்காங்க!!"

அந்த பொண்ணு உடனே...
"என்ன மேடம்? ஏன் அப்டி சொல்றீங்க?னு கேட்க..."

எங்க அம்மா...
"ஆமாம்மா, நான் கடன் வேணாம் னு சொன்னா நீ கேக்க மாட்டேங்கற, நான் வேலைக்கு லாம் போகல, வீட்ல தான் இருக்கேன், என் கிட்ட எது காசு? நான் எப்டி உனக்கு திருப்பி கற்றது? எதோ நீ ஆசப்படுறியே னு தான் நீ தர்ற பணத்த வாங்கிக்கறேன்னு சொல்றேன் னு சொல்லி இருக்காங்க!!"

கடுப்பான அந்தப் பொண்ணு உடனே செல்பேசி இணைப்ப துண்டிச்சிட்ட்ருக்காங்க!:) அப்புறமா அழைப்பு ஏதும் வரலியாம் அம்மாவுக்கு...

அட... இப்டியும் ஒரு வழி இருக்கா இவங்கள சமாளிக்க னு நான் நெனச்சிக்கிட்டேன்?! :) ஆனா, அந்த பொண்ண நெனச்சாத் தான் ஐயோ பாவம்னு இருந்துச்சி!!





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Thursday, August 6, 2009

குளியலறையால் வந்த தலைவலி...!!


நான் பொறந்து வளந்ததெல்லாம் சென்னை ங்க...!! வாக்கப்பட்டதுக்கு அப்புறம் பெங்களூருக்கு வந்தேன்... சென்னை வெயிலைப் பத்திதான் உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்குமே?! அதனாலேயே பெங்களூர் குளிரு எனக்கு பழக கொஞ்ச நாள் ஆச்சு... அதுக்குள்ளஎங்க வீட்டுக்காரருக்கு ஜெர்மனிக்கு கிளம்பும் படி அவரோட அலுவலகத்துல உத்தரவு வரவே நானும் அவரோட போன வருஷம் நவம்பர் மாசம் ஜெர்மனிக்கு வந்தேனுங்க!! நவம்பர் மாசம் நம்ம ஊர்லையே குளிருமே?!! இங்கத்து குளிர சொல்லவா வேணும்?? எப்படியோ.... கதவு, ஜன்னல் எல்லாத்தையும் சாத்திக்கிட்டு அறையில இருக்கற room heater அஹ போட்டுக்கிட்டு உக்காந்துக்கிற்றுந்தேன்...




குளிர எப்படியோ சமாளிக்க கத்துக்கிட்டாச்சு.. (போகப் போக இந்த குளிர் பழகிப் போயி சென்னைக்கு வந்தப்ப வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சது வேற கத!!)




நம்ம வீடுகள்லலாம் குளியலறைங்க... "நானும் இருக்கேன்ங்க உங்க வீட்டுலங்கர மாறி தான் இருக்கும் எதோ ஒரு மூலையில", ஒருத்தங்க போயி நின்னா அந்த அறையே நெரம்பிடர மாறி தான் கட்டுவோம்... இங்க வந்து பாத்தா படுக்கை அறைய விட குளியலறை தானுங்க பெருசா இருக்கு!




அட... அது இருக்கட்டும்ங்க... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் குளியலறைக்கு கதவு மட்டும் தானுங்க இருக்கும், காத்தோட்டத்துக்காக ஒரு ஓரத்துல ஒட்டன மாறி ஜாலி வெச்சிருப்பாங்க...!! ஆனா, இங்க(ஜெர்மனி ல) என்னடான்னா... ஒரு ஜன்னலே வெச்சிருக்காங்க..!! அதுவும் கண்ணாடில... நடுவுல ஒரு ஜாலியுமில்ல, க்ரில்லுமில்ல! இங்க வந்த புதுசுல எனக்கு ஒரு நிமிஷம் 'ஆத்தாடி, இங்கிட்டு நின்னு குளிக்கறது வெளிலேருந்து பாக்கலாம் போலிருக்கே..' னு நெனச்சி என் கொலையே நடுங்கிடுச்சில?! அப்பரம் பாத்தா, அந்த ஜன்னல்ல (கண்ணாடில) எதோ ஒட்டி வெச்சிருக்காங்க... sticker ஆம்! வெளில லாம் ஏதும் தெரியாதாம்... :) சரி தான்...




ஜன்னல் கத இப்டி ஆனாலும், சினிமாவுலயும்-விளம்பரத்துலையும் அழகா




'பாத் டப்' ல குளிக்கற மாறி காட்டுவானே.. அதே மாறி ஒன்னு இருந்துச்சிங்க.. ஆஹா.... அதப் பாத்த உடனே அவ்ளோ சந்தோசம் என் மனசுல...(!) யம்மாடி!! அத உபயோகிச்சப்ப்ரம் ல அத சுத்தம் பண்றது எவ்ளோ கொடுமைனு தெரிஞ்சிது?!!


அதோட ஏறக்கட்டியாச்சுப்பா அந்த தப்ப:(




சரி... குளியலரைலையே இன்னொரு பக்கமா 'cubicle'



வெச்சிருக்காங்களே... நமக்கு அது தான் சரிப்படும் னு நெனச்சி அது கிட்ட போனா அதுல என்னடான்னா நாம குளிச்சதுக்கப்ரமா அந்த கண்ணாடிகளையும் குளிர்ந்த தண்ணியில குளிப்பாட்டிட்டு தான் வரணுமாம்! இல்லன்னா பளபளன்னு இருக்கற அது உப்பு பூத்து போயி 'ஈ' னு பல்ல காட்டுது! இந்த கொடுமைய எங்க போயி சொல்றது?




அட இருங்கப்பா...!! இன்னொரு கொடுமையுமிருக்குங்க... அதையும் சொல்றேன் கேளுங்க... நம்ம குளியலறைய தெனமும் தண்ணி ஊத்தி கழுவி தள்ளி சுத்தம் பண்ணுவோம்ல? ஆனா இங்க என்னடான்னா.. ஒரு சொட்டு தண்ணி தரையில விழப்படாதாம்! அப்டி தவறி விழுந்துடுச்சின்னா உடனே அத சுத்தம் பண்ணிடனுமாம்! இல்லன்னா அது தரையில ஊறி ஊறி கீழ் வீட்டு செவுத்துல(நாங்க இருக்கறது இரெண்டாவது மாடியில) ஒழுகுமாம்..!! யப்பா சாமி... இது என்னடா கொடும??





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Sunday, August 2, 2009

வி.ஜி.பி பயணம்...!!


எனக்கு ஒரு 8வயசு இருக்கும்ங்க... வி.ஜி.பி கோல்டன் பீச் க்கு போகனும்ங்கறது அப்போலாம் பெரும்பாடு!! சரியான பேருந்து வசதி கிடையாது.. பேருந்து இருந்தாலும் அதுல ஏறி எடத்த பிடிக்கரதுக்குல போதும்டா சாமின்னு ஆயிடும்...!! அன்று காந்தி ஜெயந்தி வேறு... சொல்லவே வேணாமே நம்ம ஊரு பேருந்துல ஏறுற கூட்டத்த பத்தி?! அந்த கூட்டத்த இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாமுன்னு நாங்களும் கிளம்பினோம் வி.ஜி.பி. க்கு...

காலைல 6மணிக்கு என்ன எழுப்பினாங்க அம்மா... அவ்ளோ காலைலேகுளிச்சி கிளம்பி அழகு தேவதை மாறி இருந்தாங்க எங்க அம்மா... போயி குளிச்சிட்டு வா... வி.ஜி.பி. க்கு போரோம்னாங்க... எனக்கு ஒரே சந்தோஷம்... துள்ளி குதித்து வெளில வந்து பாத்தா அப்பாவும் கிளம்பிற்றுந்தாங்க... நானும் குளிச்சி கிளம்பிட்டேன்.. அப்புறம் போயி அண்ணாவ எழுப்பினேன், அவனும் கிளம்பி வந்துட்டான் சீக்ரமா... பாட்டிக்கு கால் வலிங்கரதனால அவங்க வரல.. ஆக, நாங்க 4பேரும் கிளம்பி பேருந்து நிலையத்துல வந்து நின்னப்ப காலை ஒரு 7மணி இருக்கும்ங்க...

இன்னிக்கி பூரா விளையாடப் போரோம்ங்கரத நெனச்சி நெனச்சி என் மனசுக்குள்ள உற்சாகம், பூரிப்பு எல்லாம் கலந்து ரெக்க கட்டி பரந்துற்றுந்துச்சி.. நாங்களும் நின்னோம் நின்னோம் நின்னுக்கிட்டே இருக்கோம்.. 7.30 ஆகுது 8ஆகுது இன்னும் எங்க வந்து நின்னோமோ அங்கேயே நின்னுக்ற்றுக்கோம்... எந்த பேருந்துல ஏறினா வி.ஜி.பி. க்கு போகமுடியும்னு எனக்கு தெரியாததனால நானு ஒவ்வொரு பேருந்து வந்து நிற்கும் போதும் எங்க அப்பாவியும் பேருந்தையும் மாத்தி மாத்தி பாத்துக்ற்றுந்தேன்... ஒவ்வொரு பேருந்தாக வந்து நிற்கும்... நிறைய பேர் அதுல ஏறுவாங்க... கொஞ்ச நேரம் ஆகும்.. ஓட்டுனர் வந்து பேருந்த நகர்த்திட்டு போவார்... பாத்து பாத்து எனக்கு பொறுமையே போயிடுச்சி... அப்பாவ கேக்கவே கேட்டுட்டேன்.. "அப்பா நாம போக வேண்டிய பேருந்து வருமா வராதான்னு! "

அவர் ஒரு பேருந்த காட்டி இதோ போகுது பாருடா செல்லம்... இந்த பேருந்துல போயிருக்கலாம் நாமன்னு ரொம்ப சர்வ சாதாரணமா சொல்றாரு! என்னப்பா? பின்ன ஏன் நாம அதுல ஏறல னு நான் கேட்க... அவர் சொன்னார்.. "இல்ல மா அதுல ஒரே கூட்டமா இருந்துச்சி... அதான் அடுத்த பேருந்துல போகலாம்னு விட்டுட்டோம்" எனக்கு அப்பா மீது ஒரே கோபம்... கூட்டமா இருந்தா என்னவாம்?! ஏறி போயிற்றுக்கலாம்ள னு மனசுக்குள்ளயே நெனச்சிக்கிட்டேன்... சரி அடுத்த பேருந்து எப்ப வரும் எப்ப வரும்னு பாத்துக்ற்றுந்தா அது வந்துச்சி நல்லா ஆடி அசஞ்சி ஒரு 8.30மணிக்கு...

சரி இதுலயாவது எடம் கெடச்சிதா? அதுவும் இல்ல... நாங்க போறதுக்குள்ள ஒரு கூட்டமே வந்து அடிச்சிக்கராங்கப்பா எடம் பிடிக்கறதுக்கு... ஒருத்தர் பொம்பளைங்க இருக்குறாங்கன்னு கூட பாக்காம அவரோட தோள்பட்டைய நல்லா அகலமா விரிச்சிக்கிட்டு பேருந்து ஏறும் வழியில போயி நின்னுக்கிட்டாறு... நின்னுக்கிட்டு ஒரு ஊரையே உள்ள போக சொல்றாரு(அவரோட சொந்தமாம்)... அவங்கள தவிர யாரையும் உள்ள போக விட மாற்றாருங்க! யாராவது உள்ள நுழைய பாத்தா அவங்கள பிடிச்சி தள்ளிப்புட்டு... "அட.. இரூய்யா... நாங்க குடும்பமா வந்திருக்க்ரோம்ங்கராறு..." (அப்போ மத்தவங்கல்லாம் எப்டி வந்திருக்காங்க?)

சரி... ஒரு வழியத்தான் இவர் அடச்சிட்டாறு... இறங்கும் வழின்னு ஒன்னு இருக்கும்ல?! அந்த பக்கம் போகலாம்னு அங்க பாத்தா அங்க இதுக்கு மேல கூத்தாவுல இருக்கு!! ஒரு பாட்டியம்மா ஒரு பெரிய கூடை, அப்புறம் ஒரு மூட்டை, நெறைய சாமான் சேர்த்து கட்டிய ஒரு அன்னக் கூடை, ஒரு பெட்டின்னு எல்லாத்தையும் வழில வெச்சிட்டு ஒரு கூலி ஆள வெச்சி ஏத்திக்கிற்றுக்கு.... சரி... அதோட சாமான் அது என்னவேனா பண்ணிக்கட்டும்ங்க... வேற யாரையும் பேருந்துல ஏற விடமாட்டது... மீறி ஏறலாம்னு போனவங்கள "கட்டையில போறவனே... கண்ணு தெரியல... சாமானெல்லாம் ஏத்தித்தராட்டி போற, செத்த நேரம் காத்துக்கெடந்தா கொரஞ்சியா போயிடுவ?" அப்டின்னு திட்டியே தீக்குது அந்த பாட்டி!!

சரியாப்போச்சு... இந்த கலாட்டா முடியறதுக்குள்ள பேருந்துல ஜனங்க நிரம்பி வழியறாங்க!! அப்பா... அம்மாவைப் பாத்து அடுத்த வண்டியில போகலாமானு கேக்க... எனக்கு கோபம்... முடியவே முடியாது... இதுல எடம் இல்லாட்டியும் பரவால்ல... இந்த பேருந்துலையே போயிடலாம்னு நான் ஒரே அடம் பிடிக்க அப்பாவும் சரின்னு சொல்லிட்டாரு.... ஒரு வழியா, அந்த பேருந்துல ஏறி நான் அம்மா பக்கத்துலயும், அண்ணா அப்பா பக்கத்துலயுமா நின்னுக்கிட்டோம்...

பேருந்து ஓட்டுனரும் வந்தார்... பேருந்து கொஞ்ச தூரம் போக போக... நிக்க கூட எடம் தராம இடிச்சிக்கிற்றுந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கொரஞ்சிது... ஹப்பாடான்னு கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட்டுக்கிட்டோம் நானும் அம்மாவும்! இன்னும் கொஞ்ச தூரம் போனப்புறம் பெண்கள் பக்கத்தில் (ladies seat) ரெண்டு எடம் காலியாச்சு... ஆனா... ஒரு எடத்துக்கு பின்னால இன்னொரு எடம்.. அம்மா என்ன உக்கார சொன்னாங்க... நான் நீயும் என் பக்கத்துல உக்காந்தா உக்காந்துக்கறேன் மா... இல்லன்ன உக்கார மாட்டேன் னு நான் சொல்ல அங்கு உட்கார்ந்திருந்த இரு பெண்களையும் அம்மா பணிவுடன் கேட்டுக் கொண்டார்... ஆனா, அவங்க ரெண்டு பேருக்குமே ஜன்னலோர இடத்த விட்டு எந்திரிச்சி வர மனசில்லாம முடியாதுநிட்டாங்க...

அம்மாவும்... சரி டா குட்டிமா... அம்மா உன் பின்னாடியே தான உக்காரப் போறேன்... கொஞ்ச தூரத்துல நாம எரங்கிடபோறோம்னு(!) சொல்லி என்ன சமாளிச்சி தனியா உக்கார வெச்சாங்க... சாலை மேடும் பள்ளமுமா இருந்துச்சி... அதனால... பேருந்து ஓட்டுனர் break போட்டு போட்டு ஒட்டிக்ற்றுந்தார்... எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. அம்மா கிட்ட வாந்தி வரமாறி இருக்குமானு நான் சொல்ல... என் பக்கத்துல இருந்தவாங்க கிட்ட அம்மா ஜன்னல் ஓரத்துல இடம் தர சொன்னாங்க... ஆனா... நான் சும்மா சொல்றேன் னு நெனச்சிக்கிட்டு அவங்க... என்னம்மா? என்ன புளுகுற? ஒண்ணா உக்கார எடம் தரலைன்னு இப்டி draamaa போடரியானு கேவலமா கேட்டாங்க... அங்க உக்காந்துக்ற்றுந்த மத்தவங்களும் என் பக்கத்துல உக்காந்துக்ற்றுந்தவங்களுக்கு தான் பரிஞ்சு பேசினாங்க...

அம்மாவுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம கொஞ்சம் போருத்துக்கொமா னு என்னையே சொல்லிட்டாங்க... ஆனா... என்னால முடியல... எவ்ளவோ முயற்சி செஞ்சு பாத்தேன்... கடைசியா தாங்க முடியாம எனக்கு முன்னாடி ஒரு பர்தா போட்ட ஆன்டி யோட தலையில வாந்தி எடுத்துட்டேன்... அப்புறம் என் பக்கத்துல உக்காந்திருந்தவங்க எந்திரிச்சி அய்யே... என்னம்மா இது...? நீ சும்மா சொல்றனில்ல நெனச்சிக்கிட்டேன்... நீ இங்க வா னு அம்மாவுக்கு அவங்க எடத்த விட்டுட்டு பின்னாடி (அம்மா உக்காந்திருந்த எடத்துக்கு ) போயிட்டாங்க... அதுக்கப்றம்... அம்மா வந்து நான் வாந்தி எடுத்தவங்க பர்தாவ தண்ணி ஊத்தி(water bottle எடுத்துட்டு வந்திருந்தோம்) தொடச்சி விட்டாங்க... வாந்தி எடுத்தது எனக்கு அசதியாயிடுச்சி... (பாவம் அந்த பர்தா போட்ட ஆன்டி!!)

அப்புறம் கொஞ்ச நேரத்துல அப்பா நாங்க உக்காந்திருந்த எடத்துக்கு வந்து அடுத்த நிறுத்தத்துல(stop) எறங்கனும்னு சொல்லி எந்திரிச்சி வரச் சொல்லிட்டு போனார்... ஐய்யா...!! வி.ஜி.பி. க்கு வந்தாச்சு... இந்த சந்தோஷத்துல என்னோட அசதிஎல்லாம் பறந்தே போயிடுச்சி...


எங்கள மாறி நெறைய பேர் வந்திருந்தாங்க கூட்டம் கூட்டமா... எல்லாரையும் வரவேர்க்கரதுக்குன்னு வி.ஜி.பி. காரவுங்க 'ஒரு மீச கார மாமாவ வாசல் கிட்டயே நிக்க வெச்சிருந்தாங்க!' அவரோட மீசையப் பாத்தா பயமா இருந்துச்சி எனக்கு... ஆனா... ரெண்டு பசங்க அவர் கிட்ட போயி அவர் மீசைய பிடிச்சி இழுத்தாங்க... ஆனா அவர் அசைய கூட இல்ல... அத பாத்துட்டு நான் அப்பாவ ஏன்ப்பா அவர் செல மாறி நிக்கறாருன்னு நான் அப்பாவ கேக்க... அவர் அப்படி நின்னா தான் அவருக்கு சோறு போடுவாங்கன்னு அப்பா சொல்ல...(சம்பளம் அது இதுனு சொன்னா கொழந்தைக்கு புரியாதேன்னு அப்பா அப்டி சொன்னாருன்னு இப்போ நெனச்சிக்கறேன் நானு) ஐயோ பாவம்னு தோனுச்சி எனக்கு...

சரி னு... உள்ள போனோம்... கொஞ்ச நேரம் விளையாடிட்டு...


அப்புறம் தண்ணில ஆட்டம் போட பீச் கு போனோம்... அண்ணாக்கு தண்ணி ல ஆட பயம்! அதனால வர மாட்டேன்னு சொல்லிட்டான்... சரி அம்மாவோட விளையாடலாம்னு பாத்தா அவங்களும் வர மாட்டேன்ன்கறாங்க... என்னனு கேட்டா புடைவை வீணா போயிடும்ங்கறாங்க... பீச் ல விளையாடுவோம்னு தெரிஞ்சிக்கிட்டே எதுக்கு நல்ல புடைவைய கட்டிக்கணும் இந்த அம்மா? வேற ஏதாச்சும் கட்டிக்கிட்டு வந்திருக்கலாம்ல னு கோவம் வந்துச்சி எனக்கு! (அம்மாவும் வந்துட்டா அண்ணா தனியா எப்டி நிப்பான்னு தான் அம்மா வந்திருக்க மாட்டாங்கன்னு அன்னிக்கி எனக்கு தோனல!) அப்பா மட்டும் என் கூட வந்தாங்க... அதுவும் என் கைய கேட்டியா பிடிச்சிக்கிட்டு பாதம் மட்டும் நெனையர அளவுக்கு தான் தண்ணில நின்னுற்றுந்தோம்...





அப்பா.. இன்னும் உள்ள போகலாம்னு நான் சொல்ல... அப்பா... இல்ல மா... அது ஆபத்து... அப்டி போகக்கூடாதுன்னு அவர் சொல்ல எனக்கு வெறுப்பா இருந்துச்சி... அங்கிருந்த மத்தவங்க எல்லாரும் தண்ணில அப்டி ஆடிற்றுந்தாங்க... கொஞ்ச பேர் நீச்சல் அடிக்கறாங்க... கொஞ்ச பேர் குதிச்சு குதிச்சு ஆடறாங்க... இன்னும் கொஞ்ச பேர் பந்து போட்டு விளையாடறாங்க... ஆனா என்னால மட்டும் விளையாட முடியல...

அந்த பாதம் நெனையர அளவுக்கு நின்னது கூட கொஞ்ச நேரம் தான்... ரொம்ப நேரம் தண்ணில ஆடினா(!) ஜலதோஷம் பிடிச்சிக்குமாம்... போயி அம்மாவும் அண்ணாவும் உக்காந்துக்ற்றுந்த மணல்ல அவங்க பக்கத்துல உக்காந்துக்டோம்... வீட்லேருந்து கொண்டு வந்திருந்த அம்மா செஞ்ச ஆளூ சப்பாத்தியும் கொஞ்சம் நொறுக்கு தீனியும் அந்தக் கடலை நான் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில்






என் வாய்க்குள் திணிக்கப்பட்டு என் வயிற்றுக்குள் இறங்கியது...

கொஞ்ச நேரம் கழிச்சி... ஒரு தடியை எடுத்துக்கொண்டு வந்தவர் "நேரம் ஆயிடுச்சி, கெளம்பு கெளம்புன்னு எல்லாரையும் துரத்த ஆரம்பிச்சார்..." இதென்ன? அதுக்குள்ளே நேரம் ஆயிடுச்சானு நான் யோசிக்கரதுக்குள்ள அப்பா அம்மாவையும் எங்களையும் வாங்க வாங்க போகலாம்னு கிளப்பினார்...! அம்மா என்னோட கைய பிடிச்சிக்கிட்டு நடந்தாங்க... பீச்ச விட்டு போக மனசே இல்லாம திரும்பி திரும்பி அந்தக் கடலையே மொறச்சி மொறச்சி பாத்துக்கிட்டே நடந்தேன் நான்...

வி.ஜி.பி.ya விட்டு வெளில வந்துட்டோம் நாங்க... பேருந்து நிலையத்துக்கு போனா அங்க ஏற்க்கனவே கூட்டம் அலை மோதுது... எங்க கூட வி.ஜி.பி. லேருந்து வந்த கூட்டம்... போதா குறைக்கு ஒரு மணிநேரமா எந்த பேருந்தும் வரலையாம்... என்ன பண்றது? சரி... எப்போ வருதோ வரட்டும்னு நின்னுற்றுந்தோம்... அங்கிருந்த கூட்டம் இன்னும் ஏறிக்கிட்டே இருந்துச்சு... ஒரு வழியா பேருந்தும் வந்துச்சி... ஆனா... எங்களுக்கு முன்னாடியே ஒரு கூட்டம் போயி ஏறிட்டாங்க... நிக்கறதுக்கு கூட எடமில்லாம ஜன்னல், கதவு(ஏறும்,இறங்கும் வழி) இதையெல்லாம் வேற பிடிச்சிக்கிட்டு தொங்கராங்கப்பா... அய்யய்யோ... பாக்கறதுக்கே பயம்மால இருந்துச்சி...!!





இவ்ளோவுக்கும் அங்கிருந்த பாதி கூட்டம் தான் ஏற முடிஞ்சிது அந்த பேருந்துல!
எப்டியோ ஆடி அசஞ்சி அந்த பேருந்து கிளம்பிடுச்சி... சரி... அடுத்த பேருந்து எப்ப வரும்டா சாமின்னு காத்துக் கெடந்தோம்... ஒரு வழியா அதுவும் வந்துச்சி... நாங்க அதுல ஏறவும் ஏறிட்டோம்!! ஆனா உக்கார இல்ல நிக்கறதுக்கு கூட எடமில்ல எங்க யாருக்கும்... கொஞ்ச தூரம் போனப்ப்ரம் திடீர்னு 'டாம்'னு சத்தம் கேட்டுச்சி... ஓட்டுனர் கீழ ஏறங்கிப்போயி பாத்துட்டு வந்தாரு... திரும்ப வந்து "bus breakdown" ங்க... எல்லாரும் கீழ எறங்குங்க... வேற ஏதாவது பேருந்து வந்துச்சின்னா அதுல ஏத்தி விடரோம்னு சொல்லி எல்லாரையும் கீழ ஏறக்கிட்டார்...

பேருந்து என்னமோ அந்தப்பக்கம் நெறைய வருது... ஆனா... எங்க பெருந்திலேருந்த கூட்டத்த பாத்துட்டு பயந்துட்டான்களோ என்னவோ யாருமே வண்டிய நிறுத்தல!! ஒரு வழியா கஷ்டப்பட்டு ரெண்டு பேருந்து நின்னுச்சி... ஆனா... அதுல ஏற்க்கனவே கூட்டம் நிரம்பி வழிஞ்சிற்றுந்துச்சி... எங்க கூட வந்த கூட்டத்துலேருந்து முக்கால்வாசி கூட்டம் அந்த 2பேருந்துகல்ளையும் ஏறிப் போயிட்டாங்க... மீதி பேர் அந்த வழில போன லாரில ஏறிப் போயிட்டாங்க...

ஆனா... அப்பா இதேதுளையும் ஏற மாட்டேன்னு சொல்லிட்டார்... கொழந்தைங்க இருக்காங்க.. அவங்கள கூட்டிக்கிட்டு எப்டிங்க இந்த கூட்ட நெரிசல்ல போகமுடியும்னு கத்த ஆரம்பிச்சிட்டார் நாங்க வந்த பேருந்தின் ஓட்டுனரிடம்... "ஏன்னா சார்? கைக்கொழந்தை இருக்கற மாறி பேசறீங்க? இவ்ளோ பெரிய பசங்களா இருக்காங்க!னு" அவர் சொல்ல... அப்பாவுக்கு கோபம் வந்துடுச்சி... என்னங்க இப்டி பேசறீங்க? நாங்க பைசா குடுத்து பயணச்சீட்டு வாங்கி இருக்கோம்... நீங்க நாங்க எறங்க வேண்டிய எடத்துல கூட்டிட்டு போயி எறக்கித்தான் ஆகணும்... இல்லன்னா நான் கன்ஸ்யுமர் கோர்ட் கு போவேன்னு வாதாட... பேருந்து ஓட்டுனர் பயந்து விட்டார்... சரி அப்போ கொஞ்ச நேரம் காத்துக்ற்றுங்க சார்... மெக்கானிக் க கூப்ற்றுக்கோம்... வந்துடுவார்... அப்டின்னு சொல்லிட்டு போயிட்டார்... அப்புறம் அந்த மெக்கானிக் வந்து பேருந்தை சரி செய்து தந்தப்புறம் நாங்க நாலு பேர் மட்டும்(எங்கள இடிக்கவும் ஆளில்ல... ஜன்னல் எடம்னு சண்ட போடவும் ஆளில்ல...!!) அந்த பேருந்துல பயணம் செஞ்சி எங்க ஊரு பேருந்து நிலையத்துக்கு வந்து சேந்தோம்... :-)

Wednesday, July 22, 2009

'இட்லி'கள் மீது நடத்தும் தாக்குதல்!!


எனக்கு ஒரு 5வயசு இருக்குமுங்க அப்போ!! எனக்கு எங்க வீட்டு தோட்டத்துல 'இட்லி' ஊட்டிக்கிற்றுந்தாங்க என் அம்மா.. நான் பாதி இட்லி சாப்டுட்டு போதும்னு அடம் பிடிச்சிக்கிட்டிருந்தேன்!! அம்மா என்ன சாப்ட வெக்க போராடிற்றுந்தாங்க...



அப்போ, பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி வெளில வந்தாங்க... அம்மா என்னோட போராடிக்கிற்றுக்ரத பாத்துட்டு என்னம்மா? என்னாச்சு? கொழந்தை என்ன சொல்றா?னு கேட்டாங்க.. அதுக்கு அம்மா நான் பாதி இட்லியைச் சாப்டுட்டு போதும்னு சொல்றேன்னு சொல்ல, அந்த மாமி என்னைப் பாத்து....



"என்னடி கொழந்தே? அர இட்லி சாப்டா எப்டி வளருவ நீ? உன் வயசுக்கு நல்லா ஒரு 5இட்லி 6இட்லி சாப்ட வேணாமோ? நான் லாம் உன் வயசுல அப்படித் தான் சாப்ட்டேன்னு சொல்லிட்டு... நல்லா சாப்டா தான் நல்லா ஆரோக்கியமா வளரமுடியும்னு சொன்னாங்க!



அதற்க்கு நான் வாயைப் பிளந்து கொண்டு...

"5இட்லி, 6இட்லியா? அய்யய்யோ!! ஆன்டி... அவ்ளோ இட்லி சாப்டா அதுக்கு பேர் சாப்டறதில்ல ஆன்டி, இட்லி ய நாம தாக்ரோம்னு அர்த்தம்!" என்று சொல்ல, அந்த மாமி வாயடைத்துப் போனார்..

Tuesday, July 21, 2009

அய்யய்யோ!! யாராச்சும் என் தலை முடியைக் காப்பாத்துங்களேன்!!


உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே ...!! இந்த பாட்டு(காதலில் விழுந்தேன்) நாம் எல்லோரும் அறிந்தததே! நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று! எனக்கு கல்யாணம் ஆன புதிதில் வந்த படம் வேறு...!

ஒரு முறை நான் இந்தப் பாடலை முணுமுணுத்தபடியே சமைத்துக்கொண்டிருந்தேன்... திடீரென்று என்னவர் என்னிடம் வந்து "அப்போ நீ காலம் பூரா அழுதுக்கிட்டே தான் இருக்கணும்"...ங்கறார்...! எனக்கு ஒரு நிமிடம் ஒன்னும் புரியலைங்க... அப்புறம் தான் அவரோட தலை முடி நினைவிற்கு வந்தது.. அவரை தலை நிறைய முடியுடன் நான் புகைப்படத்தில் தான் பார்த்திருக்கிறேன்... கல்லூரியில் படிக்கும் போது அழகா கரு கருன்னு என்னமா இருக்கும் (இருந்திருக்கிறது) தெரியுமாங்க அவர் தலைமுடி? இப்பொழுது அதென்னவோ வேண்டா வெறுப்பாக அவர் தலையில் இருப்பது போலத்தான் தெரியுது...



இது என்னவருக்கு மட்டுமே வந்த கொடுமையல்ல.. பெரும்பான்மையானோர் தங்கள் புகைப்படங்களைப் பார்த்துப்புலம்பும் ஒன்று! என்னங்க? சரிதானே?! முதலில் அவர் புலம்ப ஆரம்பித்த போது நான் அவரைத் தான் குறை கூறினேன்..

"சும்மா கதை சொல்லாதீங்க! அதெப்படி தன்னால முடி கொட்டிடும்? நீங்க அத ஒழுங்க கவனிச்சி இருக்க மாட்டீங்கன்னு நான் சொல்ல... என்னவர் சொன்னார்... ஒழுங்கா கவனிக்கறதா? அதென்ன ஒழுங்கா கவனிக்கறது? தனியா பிடுங்கி வெச்சு ஆரத்தி காட்ட சொல்றியானு நக்கல் அடிக்கறார்..."



"இந்த கிண்டலுக்கு ஒன்னும்குறைச்சல் இல்ல உங்களுக்கு... தலைக்கு வாரா வாரம் எண்ணைத்தேச்சு குளிச்சி, தினமும் எண்ணை தடவி இருந்தா எல்லாம் நல்லா தான் இருந்திருக்கும் உங்க முடியும்... காலேஜ் படிக்கும் போது எல்லா ஆட்டமும் ஆடினா இப்டித்தான் ஆகும்னு நான் தத்துவம் பேச அவரும் வேறு என்ன சொல்வதென்று தெரியாமல் விட்டு விட்டார்... ஆனா இப்போ வர வர நானும் என்னவர் லிஸ்ட் (list)ல சேந்துடுவேன் போல இருக்குங்க...

பாவி 'முடி' என்னமா அராஜகம் பண்ணுது? வாரத்துக்கு இரெண்டு தடவ அதுக்கு எண்ணைக்குளியலென்ன? தினமும் எண்ணை என்ன? ஆனாலும் என் தலைமுடிக்கு என் தலையைவிட என் சீப்பின் மீதுதான் அதீதக் காதல்?! எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் நீளமான கூந்தல்ங்க... அத அவ்ளோ பொறுமையா (அப்போவே சொன்ன மாறி) பாத்துக்குவேன் நானு.. இப்போ தான் கொஞ்ச நாளா தான்...(கொஞ்ச நாளா ன்னா ஒரு ஆறு ஏழு மாசம் இருக்கும்ங்க...!) இப்படி அநியாயத்துக்கு கொட்டுது என் தலைமுடி...



என்னவரிடம் புலம்பினால் அதற்கு என்னம்மா பண்றது? ங்கறார் சர்வ சாதாரணமாக... அவருக்கென்னங்க? நான் தானே இவ்ளோ நாள் வளத்தேன் என் முடிய?



நான் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்... 'என்ன ஆச்சு? எதுக்கு இந்த திடீர் மாற்றம் என்று...? இறுதியில் அதற்கான காரணமும் ஓரளவு விளங்கிவிட்டது எனக்கு.... 'அதாவது...



"நான் பிறந்து வளர்ந்தது சென்னை மாநகரிலே! வாக்கப்பட்டது வேலூரிலே! நானும் என்னவரும் இருப்பதோ பெங்களூரிலே! நாங்க மாதத்திற்கு இருமுறையேனும் வேலூரிர்க்குப்போவோமுங்க.. அங்கத்து தண்ணியும் இங்கத்து தண்ணியும் மாறி மாறி (மாத்தி மாத்தி) ஊத்தினா என் தலை முடி கொட்றது மட்டுமில்லீங்க சீக்ரமே என் தலை மொட்டையானாலும் சொல்ரதுக்கில்லீங்க...!"



சரி.... காரணம் கண்டு பிடித்தாயிற்று.. அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நம் நாட்டு மருந்துக் கடை ஞாபகம் வந்தது எனக்கு... என் அம்மா வீட்டிற்கு (சென்னைக்கு) சென்றிருந்தபோது இந்த யோசனை வரவே நானே கடைக்கு புறப்பட்டேன்!... ஒரு நாட்டு மருந்துக் கடையில் சீயக்காய், புன்கங்காய், செம்பருத்தி இலை என்று எனக்குத்தெரிந்த மூலிகைகளை வாங்கிகிட்டேன்... அதோடு விட்டிருக்கலாம்ளங்க நானு... சும்மா இல்லாம அந்தக்கடைக்காரரிடம்(சிறுவயதிலிருந்து எனக்குத் தெரிந்தவர்) வேறு ஏதேனும் சீயக்காயில் போடலாமானு கேட்டேன்... அவரும் மருத்துவப்பட்டம் படித்த மருத்துவரைப் போல... அட, தலைமுடி கொட்டுதாம்மா? இரு நான் உனக்கு ஒரு அருமையான பொடியைத் தாரேன்னு சொல்லி என்னை கடைக்குள் ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு.... உள்ளே போனாலும் போனார்.. வெகு நேரம் ஆகியும் வெளியே வரவே இல்லை... கால் மணி நேரம் ஆயிற்று...அறை மணி நேரம் ஆயிற்று .... அவர் வெளியே வரவே இல்லை... ஐயோ இதென்ன வம்பா போச்சேன்னு நெனச்சிக்கிட்டு நான் உக்காந்துக்க்டு இருந்தா இதுல ஒருத்தர் வந்து எதோ மூலிகை பேரச்சொல்லி அதக் குடுங்கறார்! நான் என்னத்தச் சொல்ல? என்ன பண்றது? நான் கடைகாரியல்ல என்று அவருக்குச் சொல்லி தானே ஆகணும்? சரின்னு நான் சீயக்காய் வாங்க வந்தக் கதையையும் கடைக்காரர் உள்ளே சென்று இன்னும் வராத கதையையும் அவரிடம் சொல்லி முடித்து கொஞ்ச நேரம் காத்திருங்கன்னு சொன்னா... அவர் சொல்கிறார்... என்னம்மா நீ? எவ்ளோ நேரம் காத்திருப்பது, உன் வீட்டுக்காரர் எப்போ வர்றது எப்போ போயி நான் சொன்ன மூலிகையை எடுத்துத் தருவதுங்கறார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை.. என்னங்க சொல்றீங்கனு அவரிடம் நான் கேட்கவும் கடைக்காரர் வெளியே வரவும் சரியாக இருந்தது! என் சாமானை (அதானுங்க, அந்த பொடியை) என்னிடம் கொடுத்து விட்டு... என்னமா? என்னாச்சு? ஏதாவது ப்ரெச்சனை பண்ணானா இந்தக் கிழவன் என்றார் அவர்... இல்ல இல்லங்க... எதோ மூலிகை கேட்டார்... நீங்க வர வரைக்கும் காத்திருக்க சொன்னேன்... அதுக்கு தான் ஏதேதோ சொல்கிறார்னு நான் சொன்னேன்..



அதற்கு அந்தக் கடைக்காரர் சொன்ன பதில் என்ன தெரியுமாங்க?



"அட...! நீ வேற மா... இந்த ஆளுக்கு இதே தான் வேல... அவனுக்கு மன நிலை சரியில்லை.. காது சரியா கேக்கவும் கேக்காது! தினமும் இப்டி தான் வந்துடுவான், ஏதாவது சொல்லி அது வேணும்பான்.. ஏதாவது சாப்ட குடுத்துட்டா போயிடுவான், இல்லன்னா பேசிக்கிட்டே இருப்பான் எதையாவது"



ஆஹா... இதென்னடா கொடுமைனு நெனச்சிக்கிட்டு.. சரி நம்ம வேலைய பாப்போம்னு அவருக்கு காசு குடுத்திட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.. சீயக்காயுடன் மாற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து வந்து வாரம் இரு முறை தலைக்கு குளிக்க ஆரம்பித்தேன்!



இதோடு என் புலம்பலுக்கு தீர்வு வந்துட்டதுன்னு தானே நினைக்கறீங்க? இல்லவே இல்லீங்க... இன்னும் ஜாஸ்த்தியா கொட்ட ஆரம்பிச்சிடுத்து என் தலைமுடி... அது போதாத குறைக்கு தலைக்கு குளிக்கும் போதெல்லாம் எனக்கு செங்கல் பொடியில் குளித்த மாதிரியே இருக்கும்! எங்க பக்கத்து வீட்டுல மாடியில வீடு கட்டிக்கிட்டு இருந்ததால அங்கேருந்து தான் எதோ வாசனை வருதுன்னு நெனச்சிக்கிட்டு ஒவ்வொரு முறையும் நானும் விட்டுடுவேன்.... ஆனா போகப் போக என் தலை முடி வறண்டு போய்கிட்டே இருந்துச்சு...



ஒரு முறை என் அம்மா எனக்கு போன் பண்ணி இருந்தப்போ எதோ பேச்சு வாக்கில் அந்த கடைக்காரர் கொடுத்த பொடியைப் பற்றியும் என் தலை முடி வறண்டு போனதைப் பற்றியும் நான் சொன்னேன்... "முதல்ல போயி அந்த சீயக்கய குப்பைல கொட்டுனு சொல்லிட்டாங்க எங்க அம்மா..." நான் என்னம்மா இப்டி சொல்றனு கேட்டா... அந்த கடைக்காரன் சமீபத்துல வ்யாபாரம் சரிஞ்சி போயிடுச்சுன்னு அவர் கிட்ட வரவங்க கிட்ட எதையாவது சொல்லி தலைல கட்டிகிட்டிருந்தாராம்.... இது இப்படியாக.. இரெண்டு நாளுக்கு முன்னாடி தான் ஒரு அம்மா அந்த கடைக்கு முன்னாடி வந்து சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாங்களாம்.. என்னன்னு பாத்தா, அவர் (என்னை ஏமாற்றியதைப் போல!)

மூலிகை பொடின்னு சொல்லி செங்கல் பொடியை சீயக்காயுடன் அரைக்க கொடுத்துட்டாராம்! அந்த பெண் போட்ட சத்தத்தில் அந்தக் கடையையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டாராம் அந்தக் கடைக்காரர்!





அதைக்கேட்டு ஒரு நிமிடம் நான் ஆடிப்போனேன்.... அட... இப்படியுமா ஏமாற்றுவார்கள்?



சரி இப்போ நம்ம கதைக்கு வருவோம்... என் தலை முடிய இப்போ நான் எப்டித் தாங்க சரி பண்றது? கொஞ்சம் உதவுங்களேன்! ப்ளீஸ்....