Wednesday, July 22, 2009

அழகா புசு புசுன்னு ஒரு நாய்!


நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அப்போது! என் பள்ளியின் அருகில் வசிக்கும் என் வயதுப் பெண் ஒருத்தி, தினமும் மாலை வேளையில்(நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சமயம்!) ஒரு அழகான பொமேரியன் நாய்க் குட்டியை அழைத்துக் கொண்டு வீதியில் நடந்து செல்வாள்.. அதைப் பார்க்கையில் எனக்கும் ஒரு நாயை வளர்க்கணும்ங்கற ஆசை வந்தது... அதனால், என் தந்தையிடம் சென்று நாயை வாங்கித் தரச்சொல்லி கேட்டேன்! அவர் வேணாம்னு சொல்லிட்டார்... எனக்கு விட மனதில்லை! அடம் பிடித்தேன்... நீங்க எனக்கு நாய்க் குட்டி வாங்கித்தரலைன்னா நான் சாப்டமாட்டேன், படிக்க மாட்டேன், எதுவும் செய்யமாட்டேன்னு சொன்னேன்... அதை செய்யவும் செய்தேன்!

குழந்தை சாப்பிடாமல் இருந்தால் எந்த அப்பாவுக்கு தான் மனசு கேக்கும்? அவர் சரி, வாங்கிக்கலாம்னு சொல்லிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார்... நானும், நாய்க்குட்டி வரப் போவதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்...
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடோடி வந்தேன்... அம்மாவிடம் அப்பா எப்போ வருவாங்கன்னு கேட்டேன்.. அம்மா சொன்னாங்க..., "நீ தான் நாய்க் குட்டி கேட்டியே? அப்பாவோட கூட வேல பாக்கிற ஆன்டி(aunty!) ஒரு நாய்க் குட்டி வச்சிருக்காங்களாம்.. நீ கேட்டனு சொன்னதும் அத எடுத்துக்கிட்டு போகச் சொன்னாங்களாம் அவங்க.... இப்போ அவங்க வீட்லேருந்து தான் போன் பண்ணாங்க உங்க அப்பா.. நாய்க் குட்டியை எடுத்துக்டு ஆட்டோல(auto) வந்துற்றுக்காங்களாம்!"

மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதந்து கொண்டிருந்தேன் நான்! அழகான, வெள்ளையான, புசு புசுவென்ற நாய்க்குட்டி ஒன்றை அப்பா எடுத்துக் கொண்டு வரப் போகிறார் என்ற கனவு வேறு! வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது... வெள்ளை பொமேரியன் நாயை எதிர்ப் பார்த்த எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம்!:(
காக்கி கலரில் அதன் உடம்பில் முடியே இல்லாத ஒரு நாய்க்குட்டியை கையில் ஏந்தியபடி வந்தார் அப்பா! எனக்கு பிடிக்கவே இல்லை:( அப்பா மீது கோபித்துக் கொண்டு அதைத் தொடக் கூட தொடாமல் என் அறைக்கு சென்று தாழ்பாள் போட்டுக் கொண்டு அப்படியே தூங்கியும் விட்டேன்... அப்பாவிற்கு ஒன்றும் புரியலை பாவம்.. என்னை அழைத்து அழைத்து அறையின் கதவைத் தட்டி தட்டி ஓய்ந்து விட்டார்... மறு நாள் காலையில் தான் கோபித்துக் கொண்ட காரணத்தை நான் சொன்னேன்!

அவர் என்னைப் பார்த்து சிரித்து விட்டு.. அட குட்டி!( என்னை அப்பா அப்படித் தான் அழைப்பார்..)... இந்த நாய்க் குட்டியும் அழகா தான் இருக்கும்டா... இது கிராஸ் (cross variety).... பொமேரியன்-பொஷெர் (pomerian-boxer) இரண்டும் கலந்த வகையைச் சார்ந்தது என்றார்... நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அப்போது அப்பா எடுத்து வந்த அந்த குட்டி நாய் என் கால்களுக்கிடையில் வந்து நின்று கொண்டு கால் விரல்களை நக்க ஆரம்பித்தது! அதை சற்றும் எதிர்பாராத நான் சட்டென்று விலகிக்கொள்ள, அது அப்படியே துவண்டு விழுந்தது.. விழுந்துவிட்டு என்னைப் பரிதாபமாக பார்த்தது! ஐயோ பாவம் என்று அதை நான் கையில் எடுத்து கொண்டு தடவி கொடுக்க அது என் அப்படியே என் மீது சாய்ந்து கொண்டுவிட்டது! அதன்பின் நான் என் கோபத்தையெல்லாம் மறந்து விட்டு தினமும் என் செல்ல நாயுடன் விளையாட ஆரம்பித்து விட்டேன்...

நாய்க் குட்டிஎன்றால் அதற்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டுமே? அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அலசி ஆராய்ந்த கதையை அடுத்த இடுகையில் பார்ப்போம்!;) ;) ;)