Monday, July 20, 2009

கையொப்பம்!!


நான் அப்போது S.t.John's உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்!

அன்றைய முன் தினம் எங்களுக்கு ரிப்போர்ட் கார்டு கொடுத்திருந்தார்கள்... அதில் மறுநாளே கட்டாயம் பெற்றோரின் கையொப்பம் பெற்றுவர வேண்டும் என்றும் கூறினார் ஆசிரியர்... ஆனால் நான் அதை மறந்தே விட்டேன்! காலை என் தோழி ரேவதி கேட்ட பின்பு தான் அது என் நினைவுக்கே வந்தது... அப்பொழுது தான் என் அம்மா என்னைப்பள்ளியில் விட்டுச்சென்றார்! அவர் வெகு தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை, அதனால் ஓடிச்சென்று கையெழுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்துக்கிளம்பினேன்...

ஆனால், பள்ளியின் வாசலில் இரண்டு மாணவர்கள் என்னை வழி மறைத்தார்கள்(ஸ்கூல் volunteers)! வெளியே செல்லக்கூடாது என்றார்கள்... நான்... " அண்ணா ரிப்போர்ட் கார்டுல கையொப்பம் வாங்கனும் எங்க அம்மா கிட்ட... வாங்கலைன்னா ஆசிரியை என்னை அடிப்பார் என்றேன் அழுதுகொண்டே!"

அதில் ஒருத்தருக்கு மட்டும் என்னைப்பார்க்க பாவமாய் இருந்திருக்கும் போல... பாவம்டா, போயிட்டு வரட்டும்னு சொல்ல, இன்னொருவர் எங்க போறாங்க உங்க அம்மா? நீ போனா அவங்கள பாக்க முடியுமான்னு கேட்டார்... நான்... போயிடுவேன் என்றேன்.. அவர்கள் அனுப்புவதாயில்லை.. என்ன செய்வது என்று யோசித்த நான் அதோ அண்ணா அங்க தான் போறாங்க எங்க அம்மா என்று அந்த வீதிக்கடைசியில் போகும் ஒருவரைக்காட்ட சரி என்று என்னை அனுப்பி வைத்தனர்....

நான் ஒரே ஓட்டமாக ஓடி அந்த வீதியைத்தாண்டி ஓடிவந்துவிட்டேன்... என் அம்மா சிறிது தூரத்தில் அவர் தோழியுடன் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து என் ஓட்டத்தை மேலும் அதிகரித்தேன்! அப்பொழுது யாரோ என்னைத்துரத்துவது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது எனக்கு.. ஆனால் திரும்பிப்பார்க்க கூட நேரமில்லை... ஓடிக்கொண்டே இருந்தேன்... ஒரு வழியாக அம்மாவின் அருகில் வந்தடைந்தேன்! அவரிடம் கையொப்பமும் வாங்கிவிட்டு மணியைப்பார்த்தேன்... மணி 8 .40, பள்ளிவாசர்க்கதவை அடைக்க இன்னும் 15 நிமிடங்கள் இருந்தது! அப்பாடா என்று பெருமூச்சு விட்டுவிட்டு சாவகாசமாய் நடந்துகொண்டிருந்தேன்... அப்போது தான் எனக்கு யார் நம்மைத்துரத்தினார்கள் என்ற சந்தேகம் எழுந்தது.. அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில் ஒரு அண்ணா எங்கள் பள்ளி உடையை அணிந்து கொண்டு மூச்சிரைக்க எனக்கு முன்னால் பள்ளி வாசலில் சென்று நின்றுகொண்டார்... அவரைப்பார்த்தேன்... என்னைப்பாவம் பார்த்து போகட்டும்டா என்று இன்னொருவரிடம்(volunteer) சொன்னாரே, அவர் தான்... என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி வேர்த்து இருக்கு... எங்க போயிட்டு வராரு? என்று யோசித்துக்கொண்டே என் வகுப்பிற்கு சென்று விட்டேன்...

பிறகு தான் புரிந்தது நான் வீதியோரத்தில் இருக்கிறார் என் அம்மா என்று சொல்லி விட்டு அந்த வீதியையும் தாண்டிச்சென்றதால் அவர்களுக்கு சந்த்தேகம் வந்திருக்கிறது... நான் பொய் சொல்லிவிட்டு எங்கோ ஓடிவிட பார்க்கிறேன் என்று நினைத்தார்கள் போலும்... பாவம் அந்த அண்ணா என்று நினைத்துக்கொண்டேன்....

(அந்த ரிப்போர்ட் கார்டைப்பற்றி ஆசிரியை கேட்காமல் போனது வேறு கதை...!!) :(