Wednesday, August 5, 2009

என் அண்ணன்...!!


இன்று ரக்க்ஷா பந்தன்... நம் நாட்டில் ஒவ்வொரு தங்கையும், (அக்காவும் தான்) தன் அண்ணனுக்காக (தம்பிக்கும் தான்) நோன்பு இருந்து அவன் நன்றாக நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் நாள்!! இது வட இந்திய கலாச்சாரம் அல்லது பண்டிகை என்று சிலர் நினைக்கலாம்... உண்மை தான், நாம் அப்படிப் பார்த்தால் தீபாவளி கூட தமிழர் பண்டிகை இல்லையே!! தமிழர் பண்டிகை என்று பெயர் பெற்றது பொங்கல் மட்டுமே!!

இந்த இனிய நாளில் நானும் என் அண்ணனுக்கு ஆண்டு தோறும் ராக்கி கட்டி விட்டு அவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுவேன்... இது எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து செய்து வருகிறேன்... ஆனால் இந்த வருடம் என்னால் என் அண்ணனை நேரில் கூட பார்க்க முடியவில்லை (தற்சமயம் வெவ்வேறு நாட்டில் வசித்து வருகிறோமென்பதால் !)... என்னதான் இப்பொழுது மின்னஞ்சல், தொலைப்பேசி என்று அனைத்தும் நாம் உபயோகப்படுத்தினாலும் நேரில் பார்த்துக் கொள்ளும் பேசிக் கொள்ளும் தருணங்களின் நெகிழ்ச்சி இவற்றில் வருவதில்லையே?!

என்னடா இது... பெரிய பாச மலர் சிவாஜி கணேசன் சாவித்திரி அண்ணன் தங்கை போல் பேசுகிறாள் என்று நினைக்கிறீர்கள் தானே? சிறு வயதில் நாங்கள் போடாத சண்டையென்று ஒன்று கிடையவே கிடையாது! ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வோம்... ஆனால் வேறொருவரிடம் இது நாள் வரையில் இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை... இந்த சமயத்தில் எனக்கு "ஸர்ப் எக்ஸ்செல்" இன் ஒரு விளம்பரம் தான் நினைவிற்கு வருகிறது...

அந்த விளம்பரம் வந்து சில ஆண்டுகள் ஆகின்றது.. ஆனால்.. அதைப் பார்க்கும் போது எனக்கு என் அண்ணன் நினைவு தான் வரும்... அந்த விளம்பரத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்... ஆனால் அது ஹிந்தியில் தான் கிடைத்தது... அதைக் கீழே உள்ள லிங்கில் தொடுத்துள்ளேன்.. பாருங்களேன்...

அருமையா எடுத்திருப்பாங்க இந்த விளம்பரத்த...!! என் அண்ணனை நான் பிரிந்திருக்கும் இந்தத் தருணத்தில் அவனை நினைத்துக் கொண்டிருந்த போது என் மனதில் தோன்றிய வரிகள்...

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த

நம் பெற்றோர்- ஒன்று

சேர்ந்தனர் திருமணத்தில்!

இருவரின் பாசப்பிணைப்பில் பிறந்தவர்கள்

நாம் இருவர்!

நீ முன்னே செல்ல

...உன்னைத் தொடர்ந்தவள் நான்!

வாழ்க்கையில் வரும் மேடு பள்ளங்களை

எதிர்கொண்டு அதனைத்

தனிமனிதனாய்க் கடந்து வந்தவன் நீ...!

அவற்றை நான் எதிர்கொள்ளும்

சூழ்நிலையில் என்னை

வழிநடத்தியவன் நீ!!

என் வாழ்க்கையென்னும் பாதையிலே

சிறு சிறு தோல்வி கண்டு

நான் அஞ்சிடவே...

முயற்சி திருவினையாக்குமென்பதை

உணர்த்தி என்னை வழிநடத்தியவன் நீ!!

உன்னைப் போலவே

என்னைத் தாங்குபவனாக...

ஒருவனைத் தேடிப்பிடித்து- என்

வாழ்க்கைத் துணையாக்கினாய் நீ!!

என் ஒவ்வொரு வெற்றியிலும்

என் உயிர் மூச்சாய் இருந்த நீ...

இக்கணம் என்னைத் தாங்க

இன்னொருவன் வந்துவிட்டாநென

ஓய்வெடுக்க நினைத்துவிட்டாயோ?!!