Tuesday, July 21, 2009

அய்யய்யோ!! யாராச்சும் என் தலை முடியைக் காப்பாத்துங்களேன்!!


உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே ...!! இந்த பாட்டு(காதலில் விழுந்தேன்) நாம் எல்லோரும் அறிந்தததே! நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று! எனக்கு கல்யாணம் ஆன புதிதில் வந்த படம் வேறு...!

ஒரு முறை நான் இந்தப் பாடலை முணுமுணுத்தபடியே சமைத்துக்கொண்டிருந்தேன்... திடீரென்று என்னவர் என்னிடம் வந்து "அப்போ நீ காலம் பூரா அழுதுக்கிட்டே தான் இருக்கணும்"...ங்கறார்...! எனக்கு ஒரு நிமிடம் ஒன்னும் புரியலைங்க... அப்புறம் தான் அவரோட தலை முடி நினைவிற்கு வந்தது.. அவரை தலை நிறைய முடியுடன் நான் புகைப்படத்தில் தான் பார்த்திருக்கிறேன்... கல்லூரியில் படிக்கும் போது அழகா கரு கருன்னு என்னமா இருக்கும் (இருந்திருக்கிறது) தெரியுமாங்க அவர் தலைமுடி? இப்பொழுது அதென்னவோ வேண்டா வெறுப்பாக அவர் தலையில் இருப்பது போலத்தான் தெரியுது...



இது என்னவருக்கு மட்டுமே வந்த கொடுமையல்ல.. பெரும்பான்மையானோர் தங்கள் புகைப்படங்களைப் பார்த்துப்புலம்பும் ஒன்று! என்னங்க? சரிதானே?! முதலில் அவர் புலம்ப ஆரம்பித்த போது நான் அவரைத் தான் குறை கூறினேன்..

"சும்மா கதை சொல்லாதீங்க! அதெப்படி தன்னால முடி கொட்டிடும்? நீங்க அத ஒழுங்க கவனிச்சி இருக்க மாட்டீங்கன்னு நான் சொல்ல... என்னவர் சொன்னார்... ஒழுங்கா கவனிக்கறதா? அதென்ன ஒழுங்கா கவனிக்கறது? தனியா பிடுங்கி வெச்சு ஆரத்தி காட்ட சொல்றியானு நக்கல் அடிக்கறார்..."



"இந்த கிண்டலுக்கு ஒன்னும்குறைச்சல் இல்ல உங்களுக்கு... தலைக்கு வாரா வாரம் எண்ணைத்தேச்சு குளிச்சி, தினமும் எண்ணை தடவி இருந்தா எல்லாம் நல்லா தான் இருந்திருக்கும் உங்க முடியும்... காலேஜ் படிக்கும் போது எல்லா ஆட்டமும் ஆடினா இப்டித்தான் ஆகும்னு நான் தத்துவம் பேச அவரும் வேறு என்ன சொல்வதென்று தெரியாமல் விட்டு விட்டார்... ஆனா இப்போ வர வர நானும் என்னவர் லிஸ்ட் (list)ல சேந்துடுவேன் போல இருக்குங்க...

பாவி 'முடி' என்னமா அராஜகம் பண்ணுது? வாரத்துக்கு இரெண்டு தடவ அதுக்கு எண்ணைக்குளியலென்ன? தினமும் எண்ணை என்ன? ஆனாலும் என் தலைமுடிக்கு என் தலையைவிட என் சீப்பின் மீதுதான் அதீதக் காதல்?! எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் நீளமான கூந்தல்ங்க... அத அவ்ளோ பொறுமையா (அப்போவே சொன்ன மாறி) பாத்துக்குவேன் நானு.. இப்போ தான் கொஞ்ச நாளா தான்...(கொஞ்ச நாளா ன்னா ஒரு ஆறு ஏழு மாசம் இருக்கும்ங்க...!) இப்படி அநியாயத்துக்கு கொட்டுது என் தலைமுடி...



என்னவரிடம் புலம்பினால் அதற்கு என்னம்மா பண்றது? ங்கறார் சர்வ சாதாரணமாக... அவருக்கென்னங்க? நான் தானே இவ்ளோ நாள் வளத்தேன் என் முடிய?



நான் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்... 'என்ன ஆச்சு? எதுக்கு இந்த திடீர் மாற்றம் என்று...? இறுதியில் அதற்கான காரணமும் ஓரளவு விளங்கிவிட்டது எனக்கு.... 'அதாவது...



"நான் பிறந்து வளர்ந்தது சென்னை மாநகரிலே! வாக்கப்பட்டது வேலூரிலே! நானும் என்னவரும் இருப்பதோ பெங்களூரிலே! நாங்க மாதத்திற்கு இருமுறையேனும் வேலூரிர்க்குப்போவோமுங்க.. அங்கத்து தண்ணியும் இங்கத்து தண்ணியும் மாறி மாறி (மாத்தி மாத்தி) ஊத்தினா என் தலை முடி கொட்றது மட்டுமில்லீங்க சீக்ரமே என் தலை மொட்டையானாலும் சொல்ரதுக்கில்லீங்க...!"



சரி.... காரணம் கண்டு பிடித்தாயிற்று.. அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நம் நாட்டு மருந்துக் கடை ஞாபகம் வந்தது எனக்கு... என் அம்மா வீட்டிற்கு (சென்னைக்கு) சென்றிருந்தபோது இந்த யோசனை வரவே நானே கடைக்கு புறப்பட்டேன்!... ஒரு நாட்டு மருந்துக் கடையில் சீயக்காய், புன்கங்காய், செம்பருத்தி இலை என்று எனக்குத்தெரிந்த மூலிகைகளை வாங்கிகிட்டேன்... அதோடு விட்டிருக்கலாம்ளங்க நானு... சும்மா இல்லாம அந்தக்கடைக்காரரிடம்(சிறுவயதிலிருந்து எனக்குத் தெரிந்தவர்) வேறு ஏதேனும் சீயக்காயில் போடலாமானு கேட்டேன்... அவரும் மருத்துவப்பட்டம் படித்த மருத்துவரைப் போல... அட, தலைமுடி கொட்டுதாம்மா? இரு நான் உனக்கு ஒரு அருமையான பொடியைத் தாரேன்னு சொல்லி என்னை கடைக்குள் ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு.... உள்ளே போனாலும் போனார்.. வெகு நேரம் ஆகியும் வெளியே வரவே இல்லை... கால் மணி நேரம் ஆயிற்று...அறை மணி நேரம் ஆயிற்று .... அவர் வெளியே வரவே இல்லை... ஐயோ இதென்ன வம்பா போச்சேன்னு நெனச்சிக்கிட்டு நான் உக்காந்துக்க்டு இருந்தா இதுல ஒருத்தர் வந்து எதோ மூலிகை பேரச்சொல்லி அதக் குடுங்கறார்! நான் என்னத்தச் சொல்ல? என்ன பண்றது? நான் கடைகாரியல்ல என்று அவருக்குச் சொல்லி தானே ஆகணும்? சரின்னு நான் சீயக்காய் வாங்க வந்தக் கதையையும் கடைக்காரர் உள்ளே சென்று இன்னும் வராத கதையையும் அவரிடம் சொல்லி முடித்து கொஞ்ச நேரம் காத்திருங்கன்னு சொன்னா... அவர் சொல்கிறார்... என்னம்மா நீ? எவ்ளோ நேரம் காத்திருப்பது, உன் வீட்டுக்காரர் எப்போ வர்றது எப்போ போயி நான் சொன்ன மூலிகையை எடுத்துத் தருவதுங்கறார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை.. என்னங்க சொல்றீங்கனு அவரிடம் நான் கேட்கவும் கடைக்காரர் வெளியே வரவும் சரியாக இருந்தது! என் சாமானை (அதானுங்க, அந்த பொடியை) என்னிடம் கொடுத்து விட்டு... என்னமா? என்னாச்சு? ஏதாவது ப்ரெச்சனை பண்ணானா இந்தக் கிழவன் என்றார் அவர்... இல்ல இல்லங்க... எதோ மூலிகை கேட்டார்... நீங்க வர வரைக்கும் காத்திருக்க சொன்னேன்... அதுக்கு தான் ஏதேதோ சொல்கிறார்னு நான் சொன்னேன்..



அதற்கு அந்தக் கடைக்காரர் சொன்ன பதில் என்ன தெரியுமாங்க?



"அட...! நீ வேற மா... இந்த ஆளுக்கு இதே தான் வேல... அவனுக்கு மன நிலை சரியில்லை.. காது சரியா கேக்கவும் கேக்காது! தினமும் இப்டி தான் வந்துடுவான், ஏதாவது சொல்லி அது வேணும்பான்.. ஏதாவது சாப்ட குடுத்துட்டா போயிடுவான், இல்லன்னா பேசிக்கிட்டே இருப்பான் எதையாவது"



ஆஹா... இதென்னடா கொடுமைனு நெனச்சிக்கிட்டு.. சரி நம்ம வேலைய பாப்போம்னு அவருக்கு காசு குடுத்திட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.. சீயக்காயுடன் மாற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து வந்து வாரம் இரு முறை தலைக்கு குளிக்க ஆரம்பித்தேன்!



இதோடு என் புலம்பலுக்கு தீர்வு வந்துட்டதுன்னு தானே நினைக்கறீங்க? இல்லவே இல்லீங்க... இன்னும் ஜாஸ்த்தியா கொட்ட ஆரம்பிச்சிடுத்து என் தலைமுடி... அது போதாத குறைக்கு தலைக்கு குளிக்கும் போதெல்லாம் எனக்கு செங்கல் பொடியில் குளித்த மாதிரியே இருக்கும்! எங்க பக்கத்து வீட்டுல மாடியில வீடு கட்டிக்கிட்டு இருந்ததால அங்கேருந்து தான் எதோ வாசனை வருதுன்னு நெனச்சிக்கிட்டு ஒவ்வொரு முறையும் நானும் விட்டுடுவேன்.... ஆனா போகப் போக என் தலை முடி வறண்டு போய்கிட்டே இருந்துச்சு...



ஒரு முறை என் அம்மா எனக்கு போன் பண்ணி இருந்தப்போ எதோ பேச்சு வாக்கில் அந்த கடைக்காரர் கொடுத்த பொடியைப் பற்றியும் என் தலை முடி வறண்டு போனதைப் பற்றியும் நான் சொன்னேன்... "முதல்ல போயி அந்த சீயக்கய குப்பைல கொட்டுனு சொல்லிட்டாங்க எங்க அம்மா..." நான் என்னம்மா இப்டி சொல்றனு கேட்டா... அந்த கடைக்காரன் சமீபத்துல வ்யாபாரம் சரிஞ்சி போயிடுச்சுன்னு அவர் கிட்ட வரவங்க கிட்ட எதையாவது சொல்லி தலைல கட்டிகிட்டிருந்தாராம்.... இது இப்படியாக.. இரெண்டு நாளுக்கு முன்னாடி தான் ஒரு அம்மா அந்த கடைக்கு முன்னாடி வந்து சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாங்களாம்.. என்னன்னு பாத்தா, அவர் (என்னை ஏமாற்றியதைப் போல!)

மூலிகை பொடின்னு சொல்லி செங்கல் பொடியை சீயக்காயுடன் அரைக்க கொடுத்துட்டாராம்! அந்த பெண் போட்ட சத்தத்தில் அந்தக் கடையையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டாராம் அந்தக் கடைக்காரர்!





அதைக்கேட்டு ஒரு நிமிடம் நான் ஆடிப்போனேன்.... அட... இப்படியுமா ஏமாற்றுவார்கள்?



சரி இப்போ நம்ம கதைக்கு வருவோம்... என் தலை முடிய இப்போ நான் எப்டித் தாங்க சரி பண்றது? கொஞ்சம் உதவுங்களேன்! ப்ளீஸ்....