Thursday, July 30, 2009

பாக்யலக்ஷ்மி...!!


தமிழ்ச்செல்வன் ஒரு பிரபல வங்கி ஊழியன். அனைவரிடமும் வெகு இயல்பாகப் பழகுவான். அன்பும், பண்பும் மிக்கவன். ஆனால் கொஞ்சம் கோபம் அதிகம். சட்டென்று எரிந்து விழுவான். பின்பு, தன் தவறை உணர்ந்து தானே சென்று தான் செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேட்டு விடுவான், அது யாராக இருந்தாலும் சரி!

ஆனால் ஒரு முறையும் அவனுக்கு இந்த வாய்ப்பை அளித்ததே இல்லை அவன் மனைவி பாக்யலக்ஷ்மி! பல முறை இவன் அவளைக் கோபித்திருக்கிறான், திட்டி அவளைப் புண்படுத்தி இருக்கிறான். ஆனால் இவன் கோபம் தணிந்து இவன் மன்னிப்பு கேட்க நினைப்பதற்குள் பாக்யா முந்திக்கொள்வாள்.

ஒருமுறை, அலுவலகம் செல்லும் பொழுது மறதியாலும், கிளம்பும் அவசரத்தாலும் அன்று எடுத்துச்செல்ல வேண்டிய காசோலையை மறந்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விட்டான். பாதி வழியில் தான் அவனுக்கு காசோலையை மறந்து போன விடயம் நினைவிற்கு வந்தது! இவனுக்கு உடனே தன் மனைவியின் மீது தான் கோபம் வந்தது(அதன் முன் தினம் அந்த காசோலையை அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று அவளிடம் கூறி இருந்தான்!). காசோலையை எடுத்துச் செல்ல வேண்டி வீட்டிற்கு திரும்பிவந்துகொண்டிருந்தான்.

வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கையில் தற்செயலாக, அந்த காசோலையைப் பார்த்த அவன் மனைவிக்கு நேற்று தன் கணவன் சொன்னது நினைவிற்கு வரவே, உடனே அதை எடுத்துக் கொண்டு தன் கணவன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். வழியில் தன் கணவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று அதனை ஒப்படைத்தாள்! ஆனால், தமிழ்ச்செல்வன் மிகுந்த கோபத்துடன் அவளை முறைத்து விட்டு தாம் வீதியில் நிற்கின்றோம் என்பதையும் பாராமல் அவளைத் திட்ட ஆரம்பித்தான். அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக கேட்டு விட்டு பின் மன்னிப்பும் கேட்டு விட்டு வீட்டிற்கு திரும்பினாள்!

ஏனோ, அன்று முழுவதும் தமிழ்ச் செல்வனுக்கு தன் வேலையில் ஈடுபாடில்லாமல் போனது. காசோலையை மறந்தது மட்டுமல்லாது, தன் மனைவியை அவசியமில்லாமல் திட்டியது அவன் நினைவிலேயே இருந்தது. "இது இரண்டுமே என் தவறு! ஆயினும், என்னவள் என்னை சிறிதும் கோபிக்காமல் பொறுமை காத்தாள்! என் கோபத்தால் நான் அவளை புன்படுத்திவிட்டேனே !" என்று வருந்தினான். அன்றிரவு எதுவுமே நடக்காதது போல வெகு இயல்பாக தன் கணவனிடம் பேசினாள் பாக்யா...

இவ்வாறாக, எப்போதுமே தன் மனைவியின் பொறுமையையும் தன் மீது அவள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் கண்டு வியப்பான் தமிழ்ச்செல்வன்!!

ஒரு நாள், இருவருமாக உட்கார்ந்து தம் கல்யாணப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும், எவரேனும் வந்து கதவைத் தட்டினால் கூடக் கேளாதவர் போல...அதில் மூழ்கியே விட்டனர்! சுவாரஸ்யமாக புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் தமிழ்ச்செல்வனிடம் பாக்யலக்ஷ்மி தம் கல்யாணத்தில் எதைப் பற்றியோ சொல்லி சிரிக்க அவனுக்கு கோபம் வீறிட்டது... கோபம் கொண்ட அவன் எதோ கத்த ஆரம்பிக்க பாக்யலக்ஷ்மிக்கு எதுவும் விளங்கவில்லை! அவனை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்ல முயல்கிறாள்... ஆனால், அவளால் அது முடியாமல் போனது...

இம்முறை ஏனோ பாக்யாவும் வாதிக்கத் தொடங்கினாள்! வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் பேசிக்கொள்வதையும் நிறுத்தி விட்டு இரவு சாப்பிடாமலேயே உறங்கிவிட்டனர்! மறுநாள் காலை எழுந்ததும் அரக்க பறக்க எதையோ சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கு ஓடி விட்டான் தமிழ்ச்செல்வன். அலுவலகத்தில் வேலைபளுவால் மதியம் வரை அவனால் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. மதியம் சாப்பிடும் சமயம் தான் அவனுக்கு பாக்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றிற்று...

சரி தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம் என்று நினைத்தவன் தன் கைப்பேசியை எடுத்து பாக்யாவின் கைப்பேசி எண்ணைத் தேடினான். ஆனால் பாக்யா என்ற பெயரே அதில் இல்லை! ஐயோ.. என்ன இது? கோபத்தில் நேற்று அவள் எண்ணை அழித்துவிட்டோமா என்று அவன் நினைத்து முடிப்பதற்குள் அவனுடைய கைப்பேசி அழைப்பு மணியை எழுப்பியது!

"உன் செல்லம் பாவம் ல? என்ன மன்னிச்சிடு டா!"

என்ற வரிகள் தோன்றியது அவன் கைப்பேசியில்... தன் கைப்பேசியை அழுத்திப் பேசினான்... பேசியது பாக்யா!! நேற்று இரவே தான் தூங்கும் சமயம் தன் பெயரை இப்படி மாற்றி வைத்திருக்கிறாள் என்பது அவனுக்கு விளங்கியது. .. பேசிவிட்டு கைப்பேசியை அணைத்துவிட்டு அவன் நினைத்த வார்த்தைகள்...

"அடிக் கள்ளி! இம்முறையும் நீயே முந்திவிட்டாயடி!!"