Monday, July 27, 2009

என் நாய்க்குட்டி செய்த அட்டூழ்யங்கள்...!!





எங்க நாய்க்குட்டி பண்ற அட்டூழ்யத்துக்கு ஒரு அளவே இல்லீங்க! இரண்டு முறை அது இரண்டு பேர துரத்தி அடிச்சிருக்கு...


முதல் சம்பவம்...





எங்கள் வீதியில் கணேஷ் என்றொரு சிறுவன் இருந்தான்... கொழு கொழுவென அமுல் பேபி போல இருப்பான்! அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவார் என் தந்தை... குட்டி friend என்று தான் அவனை அழைப்பார்.. எனக்கே பொறாமை ஏற்ப்படும் அளவிற்கு இருவரும் நன்றாக விளையாடுவர்.. எங்க விக்கி என் அப்பா செல்லம்! எங்க அப்பான்னா அதுக்கு உயிர்...!! அதனிடம் மட்டும் தான் அப்பா செல்லம் காட்ட வேண்டும் என்று நினைக்கும்!! நான் அவர் பக்கத்துல உக்காந்து பேசிற்றுக்கும் போது கூட கோபமாக சில நேரம் குறைக்கும்...





எனவே கணேஷைப் பார்த்தால் அதற்கு ஆகாது! அவனைப் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்ததோ என்னவோ தெரியவில்லை...! ஒரு நாள் அவன் அப்பாவுடன் விளையாட என் வீட்டிற்கு வந்திருந்தான்.. அவன் வந்திருக்கிறானே என்று விக்கி யை கட்டிப் போட்டுவிட்டு நான் உள்ளே சென்றேன்... கணேஷும் விக்கி கட்டி தான் இருக்கிறதென்று உள்ளே வந்து விட்டான்.. அப்பாவும் அவனிடம் எதோ பேசிக்கொண்டிருந்தார்...





எங்கிருந்து வந்ததோ தெரியவில்லைங்க எங்க விக்கி கு அவ்ளோ ஆக்ரோஷம்?! அதைக் கட்டி வைத்திருந்த சங்கிலியையும் அறுத்துக் கொண்டு கணேஷை நோக்கி ஓட ஆரம்பித்தது... அவன் பாவம் இதைக் கண்டதும் பயந்து போயி தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான்... இதுவும் விடுவதாயில்லை, அவனைத் துரத்திக் கொண்டே இருக்கிறது! இருவரும் எங்கள் வீதியைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர்..






என் அப்பாவும் விக்கி பின்னால் ஓட ஆரம்பித்தார்... வேண்டாம் டா விக்கி.. வந்துடறா னு சொல்லி சொல்லி அதன் பின்னால் ஓடி அப்பாவுக்கு கால் வலியும் மூச்சு இறைத்தும் தான் மிச்சம்... பாவம், கணேஷை ஓட ஓட விரட்டி அடித்தது அது..!!





அதன் கோபம் தீர அவனை துரத்தி விட்டு அது பாட்டுக்கு "பெரிய மேதாவி" போல எங்க வீட்டிற்குள் நுழைந்து அதன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டது... கணேஷ் கு தான் பயத்தில் ஜுரமே வந்து விட்டது... அன்று எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தியவன் தான்...! இன்று வரை அவன் வரவே இல்லை...





ஆனால் இன்றும் எங்கள் வீட்டு வழியாகச் செல்லும் போது நின்று அதனிடத்தில் (விக்கி யிடம்) பேசிவிட்டுத் தான் செல்வான்..





என்ன பேசுவான் தெரியுமா....??





டேய் விக்கி... என்ன ஓட ஓட விரட்டிட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி வால் ஆட்ரியா?? இரு இரு உன்ன கவனிச்சுக்கறேன்!!








இரண்டாவது சம்பவம்...





என் அண்ணா பள்ளி சுற்றுலாவிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம்... எங்கள் அத்தை மகன் ஒரு வேலையாக எங்க வீட்டிற்கு வந்திருந்தார்.. இரவு வேளை ஊருக்கு செல்ல வேண்டாம் என்று அப்பா சொன்னதால் எங்க வீட்டில் தங்கினார்... மாற்றுத் துணி ஏதும் கொண்டு வராததால் என் அண்ணனுடைய நைட் பான்ட் ஐ அணிந்து கொண்டு தூங்கி இருக்கிறார்.. மறுநாள் காலையில், என் அம்மா விக்கி க்கு பாலோ சாப்பாடோ கொடுப்பதற்காக அதனை உள்ளே அழைத்து வந்தார்... அப்போது அங்கு உறங்கிக் கொண்டிருந்த எங்க அத்தை மகன் அணிந்திருந்த என் அண்ணாவினுடைய (pant) பான்ட்டை அது பார்த்து விட்டு அண்ணா தான் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டான் என்று நினைத்துக் கொண்டது போலும்! ஓடி சென்று அவர் படுத்திருந்த படுக்கையின் மேல் எரிக் கொண்டு அவருடைய காலை நக்க ஆரம்பித்தது... இதனைப்பார்த்து பயந்து போன அவர் வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்குமாக ஓட ஆரம்பித்தார்!





அது என் அண்ணா இல்லை என்று அறிந்ததும் விக்கி யும் அவரைத் துரத்த ஆரம்பித்தது... அவரை ஏற்க்கனவே ஒரு நாய் கடித்திருப்பதால் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவர் அந்த அறையின் கதவின் மேல் ஏறிக்கொண்டு கத்த ஆரம்பித்தார்... அதன் பின் என் அப்பா ஓடி வந்து அதனை கட்டிப்போட்டார்..